Tuesday, October 4, 2011

பூஜைகள்

சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜை அன்று நமது தொழில் கருவிகள், கணக்குப் புத்தகங்கள், படிக்கும் புத்தகங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வைத்து சரஸ்வதி படத்துக்கு வெள்ளை நிற மலர்களால் அலங்காரம் செய்து, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி படித்து நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும்.
சரஸ்வதி பூஜையில் புதிய புத்தகம் ஒன்றை வாங்கி வைத்து வழிபட்டு மறுநாள் படித்தல் மிகவும் சிறப்பானது.
ஆயுதம் என்பதன்  உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது எனலாம்.உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.
ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.
ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமே.

விஜயதசமி
தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருள்கள் உண்டு. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று மூன்று சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , சண்ட முண்டனை வதம் செய்த நன்னாள் விஜயதசமி. இன்று ஸ்ரீ அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.
ஸ்ரீ துர்கா தேவி
விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று ஸ்ரீ அன்னை விஜயம் செய்யும் நாளே ’விஜயதசமி’ என்றும் கூறப்படுகிறது. அன்று ஸ்ரீ அன்னையே நம் இல்லம் தேடி வருகிறாள் என்பதே இந்நாளின் மிகப் பெரிய சிறப்பு.
அன்றுதான் ராவணாசுரனை ஸ்ரீ ராமன் வதம் செய்தான். பாண்டவர்கள் தங்களது போரின் வெற்றிக்கு நன்றி கூறும் விதமாக அன்னை எனும் மகாசக்திக்கு, தாங்கள் போரிட்ட ஆயுதங்களை முன் வைத்து வழிபாடு செய்த நன்னாளும் இதுவே!
இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய இந் நன்னாள் மற்றொரு விதத்திலும் மிகுந்த சிறப்புப் பெற்றதாகிறது. ஆம், இந் நன்னாளில் தான் மகா அவதார புருடர் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா மகா சமாதி அடைந்தார். அது மட்டுமல்ல ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் ஜீவ சமாதி கொண்ட தினமும் இதுவே!
விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று.

nandri :- http://tamilastrology.yourastrology.co.in/

No comments:

Post a Comment