நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!!
சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடிப்பது மிகவும் முக்கியமாகும். அப்படி இல்லையென்றால் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்வது இயலாமல் போய்விடும். தீவிரமான சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க, ஒருசில அறிகுறிகள் தெரிந்தாலே உங்கள் மருத்துவரை அணுகுங்கள். சீக்கிரமே கண்டுப்பிடித்தால் சிறுநீரக நோய்களுக்கு சிறப்பான சிகிச்சையை அளித்திடலாம்.
சிறுநீரக செயல்பாட்டில் மாற்றங்கள் :-
சிறுநீரக நோயின் முதல் அறிகுறியே சிறுநீர் வெளியேறும் அளவிலும், அதனை எத்தனை முறை கழிக்கிறோம் என்ற வீதத்திலும் ஏற்படும் மாற்றம். சிறுநீர் அளவு கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். அதே போல் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை வீதமும் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். அதுவும் முக்கியமாக இரவு நேரத்தில் தான் இந்த மாற்றங்களை உணரலாம்.அதில் சிறுநீரின் நிறமும் அடர்ந்த நிறத்தில் இருக்கலாம் அல்லது அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றும், ஆனால் எதுவுமே வராது.
சிறுநீர் கழிக்கும் போது கஷ்டப்படுவது அல்லது வலி எடுப்பது :-
சில நேரம் சிறுநீர் கழிக்கையில் கஷ்டப்படலாம் அல்லது அழுத்தத்தை உணரலாம் அல்லது வலி ஏற்படலாம். சிறுநீரக பாதையில் தொற்றுக்கள் ஏற்பட்டால் சிறுநீர் கழிக்கையில் வலி அல்லது எரிச்சல் தன்மை உண்டாகும். இந்த தொற்றுக்கள் சிறுநீரகங்களுக்கு பரவினால் காய்ச்சல் உண்டாகி, பின்பக்கம் வலியும் எடுக்கும்.
சிறுநீரில் இரத்தம் :-
இது சிறுநீரக நோயின் அறிகுறியாகும். கண்டிப்பான முறையில் இது சிறுநீரக நோயையே குறித்தாலும் கூட, சில நேரத்தில் வேறு காரணமும் கூட இருக்கலாம். அதனால் அப்படி ஏதேனும் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.
வீக்கம் :-
உடலில் உள்ள கழிவுகள் மற்றும் கூடுதல் நீர்மத்தை அகற்றுவதே சிறுநீரகத்தின் வேலை. அதனை அவையால் செய்ய முடியவில்லை என்றால், இந்த கூடுதல் நீர்மம் குவிந்து கொண்டே சென்று, அதனால் கைகள், கால்கள், முகம் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படும்.
தீவிரமான சோர்வு மற்றும் பொதுவான அயர்ச்சி :-
எரித்ரோபோய்டின் என்ற ஹார்மோனை சிறுநீரகங்கள் சுரக்கிறது. இது இரத்தச் சிவப்பணுக்களை ஆக்சிஜன் கொண்டு செல்ல உதவும். சிறுநீரக நோய் ஏற்பட்டால் எரித்ரோபோய்டின் சுரப்பது குறைந்து விடும். இதனால் உங்கள் உடலில் உள்ள இரத்தச் சிவப்பணுக்கள் குறைந்து விடும். இதன் மூலம் இரத்த சோகை ஏற்படும். இதன் காரணமாக அனைத்து அணுக்களுக்கும் ஆக்சிஜன் குறைவாக செல்லும். அதனால் தான் பொதுவான அயர்ச்சியும் தீவிரமான சோர்வும் ஏற்படுகிறது.
மயக்க உணர்வு மற்றும் ஒருமுகப்படுத்துவதில் இயலாமை :-
சிறுநீரக நோயுடன் தொடர்புடைய இரத்த சோகை, உங்கள் மூளைக்கு செல்லும் ஆக்சிஜனை வெறுமையாக்கும். இதனால் மயக்க உணர்வு, ஒருமுகப்படுத்தலில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
எப்போதும் குளிர்வது :-
உங்களுக்கு சிறுநீரக நோய் இருந்தால் வெதுவெதுப்பான சூழல் நிலவினாலும் கூட, இரத்த சோகை இருப்பதால், எப்போதுமே குளிராகவே இருக்கும். பிளோன்ஃபிரிடிஸ் (சிறுநீரக தொற்று) இருந்தால் குளிர் காய்ச்சல் ஏற்படும்.
சருமத்தில் சொறி மற்றும் அரிப்பு :-
சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போனால் உங்கள் இரத்தத்தில் கழிவுகள் குவியும். இதனால் சருமத்தில் தீவிரமான சொறிகளும், அரிப்புகளும் ஏற்படும்.
அமோனியா மூச்சு மற்றும் மெட்டாலிக் சுவை :-
சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போனால், இரத்தத்தில் உள்ள யூரியாவின் (யூரேமியா) அளவு அதிகரித்து விடும். இந்த யூரியா நம் எச்சிலில் அமோனியாவாக உடையும். இது மூச்சு காற்றை சிறுநீரகம் போன்ற கெட்ட வாடையாக மாற்றும். இதனை அமோனியா மூச்சு என்பார்கள். இதனால் வாயில் எப்போதும் எரிச்சலை ஏற்படுத்தும் மெட்டாலிக் சுவை உண்டாகும்.
குமட்டல் மற்றும் வாந்தி :-
சிறுநீரக நோய் இருந்தால் இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்கள் குவிந்து கொண்டே போகும். இதனால் குமட்டலும் வாந்தியும் ஏற்படும்.
மூச்சு விடுவதில் சிரமம் :-
சிறுநீரக நோய்கள் இருந்தால் நுரையீரலில் நீர்மம் சேர்ந்து விடும். மேலும் சிறுநீரக நோயினால் ஏற்படும் பொதுவான பக்க விளைவான இரத்த சோகையும் ஏற்படும். இதனால் உடலுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதன் விளைவாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
முதுகு மற்றும் இரு பக்கங்களிலும் வலி :-
சிறுநீரக நோய் இருந்தால் சில நேரங்களில் வலி ஏற்படும். சிறுநீரக குழாயில் கல் இருந்தால், கீழ் முதுகில் ஆரம்பித்து கவட்டை வரை தீவிரமான வலி ஏற்படும். பாலிசிஸ்டிக் என்ற சிறுநீரக மரபு நோய் இருந்தாலும் கூட வலி ஏற்படும். இதனால் சிறுநீரகத்தில் நீர் நிறைந்த பல கட்டிகள் உருவாகும். நீர்ப்பை சுவர்களில் திசு இடைநார் சிறுநீர்ப்பை அழற்சி என்ற தீவிரமான அழற்சி ஏற்படும் போது, தீவிரமான வலியும் சுகவீனமும் ஏற்படும்.
No comments:
Post a Comment